ரோஹிங்கியா இஸ்லாமியர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க உள்துறை உத்தரவு

டில்லி:

ரோஹிங்கியா இஸ்லாமியர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

ரோஹிங்யா அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ரோஹிங்யா அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டுமென மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 14 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மட்டுமே ஐ.நா. விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டவர்கள். 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “இந்தியாவில் இருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்களில் சிலருக்கு சட்டவிரோத நடவடிக்கையில் தொடர்புள்ளது’’ என்றார். சட்டப்பூர்வமாக குடிபெயர்ந்த இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே ஆதார் போன்ற ஆவணங்கள் வழங்க முடியும். இந்தியாவில் 6 மாதங்களுக்கு மேலாக இருப்பவர்களுக்குதான் வழங்க முடியும்.

ரோஹிங்யாக்களை பொறுத்தவரையில் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள். அவர்கள் இதற்கு தகுதியானவர்கள் கிடையாது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அரசு ஆதார் கார்டு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். அவர்களை வெளியேற்றவும், கண்காணிக்கவும், தனிப்பட்ட தகவல்களை பெறவும் மாநில அரசுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.