டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்,  ரூ.4,500 கோடியை மத்தியஅரசு  ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

‘நாட்டில் கொரோனா 2வது அலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, எடுக்கப்பட வேண்டிய தீவிர நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பல்வேறு துறை நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனும் ஆலோசிக்க உள்ளார்.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து,  பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை யின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த   கூட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி வினியோகம் பற்றி  விவாதிக்கப்பட்ட தாகவும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள  மாநிலங்களில் கூடுதலாக லாக்டவுன், தடுப்பூசி போடுவது குறித்தும் பேசப்பட்டதாகவும்,  பல மாநிலங்களில் தடுப்பூசி  பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்,  18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும்போது, மருந்து தேவைகள் அதிகரிக்கும், அதை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் ஸ்புட்னிக் தடுப்பூசியும் பயன்பாடடுக்கு வர உள்ளது. அதை  இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் அந்த தடுப்பூசி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்த தங்களுக்கு  நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சீரம் நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளன. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதையடுத்து, தடுப்பூசி தயாரிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில்,  சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு முன்பணமாக மத்திய அரசு 4,500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இதற்கு மத்திய அமைச்சசரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த 4500 கோடியில்,  3 ஆயிரம் கோடி ரூபாய் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கும், 1,500 கோடி ரூபாய் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட  இருப்பதாகவும் கூறப்படுகிறது.