உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 2 வக்கீல்களின் பெயரை மத்திய அரசு நிராகரிப்பு

டில்லி:

உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலிஜியம் பரிந்துரை செய்த 2 வக்கீல்களை பெயரை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்கும் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த வகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 2 வக்கீல்களின் பெயரை கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

இதை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு வக்கீல் ஹர்நரேஷ் கில் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதேபோல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு வக்கீல் முகமது நிஜாமுதீன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த 2 பெயர்களையும் மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியதை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘இரு பெயர் பரிந்துரையும் திரும்பி வந்திருப்பது உண்மை தான். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து உத்தரவு வந்த பின்னர் அது கொலிஜியம முன்பு சமர்ப்பிக்கப்படும். ஆனால், இது போன்ற ஒரு நடைமுறை இதற்கு முன்பு நடந்ததாக எனக்கு தெரியவில்லை. இது வழக்கத்திற்கு மாறான செயலாக உள்ளது’’ என்றார்.

கடந்த 2016ம் ஆண்டு 4 வக்கீல்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இது நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பஷ்ரத் அலி கான் மற்றும் முகமது மன்சூர் ஆகிய வக்கீல்களின் பெயர் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. தற்போது மீதமிருந்து 2 பெயர்களையும் திருப்பி அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.