டோக்லாம் குறித்த தகவல்களை மத்திய அரசு அளிப்பதில்லை : சீக்கிம் முதல்வர்

கொல்கத்தா

டோக்லாம் குறித்த தகவல்களை அளிக்காததால் சிக்கிம் மக்கள் போர் அச்சத்தில் உள்ளதாக சிக்கிம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா எல்லையான டோக்லாம் பகுதி சிக்கிமில் அமைந்துள்ளது.   இங்கு சீனா மற்றும் இந்தியப் படைகள் சில மாதங்களுக்கு முன்பு குவிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.   சிக்கிமுக்கு ஏற்கனவே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் கூர்க்காலாந்து போராளிகளால் அச்சம் உள்ளது.

இந்நிலையில் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் மேற்கு வங்க மாநிலம் வந்துள்ளார்.   அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம், “நாங்கள் இந்திய சீன எல்லைப் பகுதிகளில் உள்ளதால் எங்களுக்கு டோக்லாம் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளில் அக்கறை உண்டு.   ஆனால் மத்திய அரசும் ராணுவமும் எந்த ஒரு தகவலும் அளிப்பதில்லை.  அதனால் சிக்கிம் மக்கள் எப்போதும் போர் குறித்த அச்சத்துடன் இருக்கின்றனர்.

நாங்கள் எல்லைப் பகுதியில் உள்ளதால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நல்லுறவை விரும்புகிறோம்.    ஏற்கனவே எங்களுக்கு நேபாளத்தில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளாலும் டார்ஜிலிங்கில் இருந்து கூர்க்காலாந்து போராளிகளாலும் அச்சுறுத்தல் உள்ளது.    எனவே எந்த ஒரு விஷயத்தையும் மத்திய அரசு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.   தற்போது நாங்கள் எல்லா விவரங்களையும் செய்தித் தாட்கள் மூலமே தெரிந்துக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.