நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தது மத்திய அரசு

டெல்லி:

டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில், கடந்த சனிக்கிழமை மாலை குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான மக்கள் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகில் கூடி போராட்டம் நடத்தினர். மறுநாள், அதே இடத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வேறு நூற்றுக்கணக்கான பேர் கூடினர். ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினரும் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு பதற்றம் நிலவியது.

டெல்லி வன்முறை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் அடங்கிய அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில் பா.ஜ.,வை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மிகவும் ஆட்சேபகரமான முறையில் பேசியுள்ளனர். அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., தாக்கல் செய்து, வழக்கை டெல்லி போலீஸ் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு, போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவரை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடை மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. முரளிதரை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த 12-ம் தேதியே உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதை எதிர்த்து டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், இந்த அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியாக முரளிதர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.