இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மேலும் ரூ.3719 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

டில்லி:

யற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட கேரளா உள்பட பல மாநிலங்களுக்கு அடுத்க்கட்டமாக ரூ.3719 கோடி நிதி ஒதுக்கி உள்ளது மத்திய அரசு. இதில் தமிழகத்திற்கு எதுவும் கிடையாது.

கடந்த மாதம் தமிழகத்தில் கஜா புயல் காரணமாக வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டது. இதற்கு நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ.15ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில்,  மத்திய அரசு ரூ.353.70 கோடி இடைக்கால நிவாரணம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் கேரளா கடுமையான வெள்ளப்பாதிப்புகளில் சிக்கியது. அப்போது மாநில அரசு சார்பில் ரூ.4700 கோடி கேட்ட நிலையில், ரூ. 3048.39 கோடியையே ஒதுக்கியது. இதன் காரணமாக இயற்றை பேரிடர் பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும்,   கடந்த அக்டோபர் மாதத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தித்லி புயல் காரணமாக பேரழிவும் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதங்களில் நிகழ்ந்த இயற்க்கை பேரிடர்களால் பேரழிவை சந்தித்த மாநிலங்களுக்கு கூடுதல் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. நேற்று நடைபெற்ற  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழுவில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மேலும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்திற்கு மேலும்  ரூ. 3048.39 கோடி ஒதுக்கப்பட்டது. அதே போல், ஆந்திர மாநிலத்திற்கு ரூ. 539.52 கோடியும், நாகலாந்து மாநிலத்திற்கு ரூ. 131.16 கோடியும் கூடுதல் நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.