மோடி அரசின் விளம்பர மோகம்: 4 ஆண்டுகளில் ரூ.5200 கோடி செலவீடு

டில்லி:

மோடி தலைமையிலான பாஜக அரசு  விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.5,200 கோடி செலவு செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   கடந்த நான்காண்டுகளில் ஐந்தாயிரத்து 200 கோடி ரூபாயை விளம்பரங்காளுக்காக செலவிட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த செலவு 2,800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விளம்பரத்துக்காக மட்டும் 5200 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த  தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ரத்தோர், கடந்த 2014-,ம் ஆண்டிலிருந்து விளம்பரங்களுக்காக மத்திய அரசு 5,200 கோடி ரூபாயை செலவளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதில், 2014-15-ம் ஆண்டில் ரூ 979 கோடியும், 2015-16-ம் ஆண்டில் ஆயிரத்து 160 கோடி ரூபாயும், 2016-17-ம் ஆண்டில்  ஆயிரத்து 264 கோடி ரூபாயும், 2017-18-ம் ஆண்டில் ஆயிரத்து 213 கோடி ரூபாயும், நடப்பாண்டில் டிசம்பர் மாதம் வரை 527 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 5,200 கோடி ரூபாய் விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது.

இதில், இரண்டாயிரத்து 282 கோடி ரூபாய் அச்சு ஊடக விளம்பரங்களுக்கும், இரண்டாயிரத்து 312 கோடி ரூபாய் காட்சி மற்றும் ஒலி ஊடக விளம்பரங்களுக்கும், 651 கோடி ரூபாய் பிற விளம்பரங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.