ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் தயார்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

புதுடெல்லி:

ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைவில் கையில் எடுக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.


பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:

கோதாவரி நதியிலிருந்து வெளியேறும் 1100 கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கோதாவரி-காவிரி நதிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்துக்கு ஆகும் செலவு ரூ.60 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோதாவரி-கிருஷ்ணா-பென்னார்-காவிரி இணைப்புத் திட்ட விரிவறிக்கை தற்போது தயாராக உள்ளது. விரைவில் கேபினட் ஒப்புதல் பெறப்படும்.
அதன்பிறகு, உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி பெறுவோம்.

இவ்வாறு இணைக்கப்படும் கோதாவரி நதி நீர், தமிழ்நாட்டின் கடைக்கோரி வரை சென்றடையும்.
தமிழக& கர்நாடகா நதிநீர் பிரச்சினைக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும் இது தென்னிந்தியாவின் 4 மாநிலங்களுக்கும் பயன் தரும்.

நதி நீரை இணைப்புக்கு கால்வாய் வெட்டினால் அதிகம் செலவாகும். எனவே இரும்புக் குழாய்கள் மூலம் நீரை கொண்டு வரலாம் என அமெரிக்க என்ஜினியர் ஒருவர் ஆலோசனை கூறியிருக்கிறார். இது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.