கொரோனா பரவல் சங்கிலியை உடையுங்கள்: மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து இறப்பு விகிதத்தை 1 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: மத்திய சுகாதார அமைச்சகமானது, சுகாதார அமைச்சகமானது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் கொரோனா தொற்றுகள் குறித்து  தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்கான நடவடிக்கைகளை கவனம் செலுத்தவும், இறப்பு விகிதம் 1% க்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

உயர் சோதனை, பயனுள்ள மருத்துவ நிர்வாகத்தை முன்கூட்டியே உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறப்பைக் குறைத்து, பல்வேறு நிலைகளில் திறமையான கண்காணிப்புடன் உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகமானது, ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக தொற்றுகள் கொண்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.  மகாராஷ்டிராவில், புனே, நாக்பூர், கோலாப்பூர், சாங்லி, நாசிக், அகமதுநகர், ராய்காட், ஜல்கான், சோலாப்பூர், சதாரா மற்றும் பால்கர் ஆகிய மாவட்டங்களும், ஆந்திராவில், பிரகாசம் மற்றும் சித்தூர் ஆகிய மாவட்டங்களும் கண்காணிக்கப்பட்டன.

கர்நாடகாவில், கொப்பல், மைசூரு, தாவணகரே மற்றும் பெல்லாரி ஆகிய மாவட்டங்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை வசதிகளை உகந்த முறையில் பயன்படுத்தவும், வீடு தோறும் கொரோனா நோயாளிகளை கண்டறிதல்,  சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டன.

ஒட்டுமொத்தமாக, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 60 சதவீதத்திற்கும் மேலாக ஐந்து மாநிலங்கள் உள்ளன. ஆந்திர பிரதேசம் (12.06 சதவீதம்), கர்நாடகா (11.71 சதவீதம்), உத்தரப்பிரதேசம் (6.92 சதவீதம்), தமிழகம் (6.10 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் தொற்றுகள் பதிவாகி உள்ளன.

நாட்டின் மொத்த இறப்புகளில் 70% மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, டெல்லி மற்றும் ஆந்திராவின் ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன. மொத்த இறப்புகளில் 37.33 சதவீதம் மகாராஷ்டிரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.