புதுடில்லி:  ஜம்மு-காஷ்மீரில்  சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்படுவதை அடுத்து மத்திய அரசு அங்கிருந்து துணை ராணுவப் படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) பத்து பிரிவுகள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து அசாமுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 20 சிஆர்பிஎஃப் படைப்பிரிவுகள் அசாமுக்கு அனுப்பப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் படையினர் வசதியாக அசாமை அடைய உதவும் வகையில் ஒரு சிறப்பு ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

ஏழு சிஆர்பிஎஃப் படைப்பிரிவினரை மணிப்பூருக்கு செயல்பாட்டு அடிப்படையில் சேர்க்கும் உத்தரவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. மேலும் இந்த படைப்பிரிவுகள் சிறப்பு ரயில் மூலம் திமாபூர் வந்து சேர்ந்தவுடன் சட்டம் மற்றும் ஒழுங்கு கடமைக்காக அசாம் அரசின் வசம் விடுவிக்கப்பட வேண்டும் என ANI க்கு அதிகார பூர்வமாக கிடைத்த செய்தி தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு ஆகஸ்டில், முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளித்திருந்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவை மத்திய அரசு அறிவித்தது,

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பிராந்தியத்தில் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டன. சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சம்பவங்களில் போலீசாரால் நடத்தப்பட்டத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மரணம் கூட நடக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், சட்டம் ஒழுங்கு தொடர்பான சம்பவங்களில் 197 பேர் காயமடைந்துள்ளனர். அதே காலகட்டத்தில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவங்களில் மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 17 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 129 பேர் காயமடைந்தனர். ” என்று உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.