டெல்லி: தனியுரிமை கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை திரும்ப பெறுமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் புதிய தனியுரிமை கொள்கை மாற்றம் குறித்த அறிவிப்பு அதன் பயனாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.

இந் நிலையில், மாற்றங்கள் அனைத்தும் ஒரு தலைபட்சமானது என்றும், அவற்றை திரும்ப பெறுமாறும் வாட்ஸ் அப் தலைமை செயல் அதிகாரி வில் காட்கார்டுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

உலகின் மிகபெரிய பயனாளர்கள் தளமாக இந்தியா விளங்குகிறது என்றும், எனவே அதன் சேவைகளுக்கான மிக பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்று அந்த கடிதத்தில் மத்திய அரசு கூறி உள்ளது.

கடிதத்தில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: வாட்ஸ் அப் விதிமுறைகள், தனியுரிமை கொள்கை மாற்றங்கள் இந்திய பயனாளிகளின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அறிவிக்கப்பட்ட மாற்றங்களை வாட்ஸ் அப் நிர்வாகம் திரும்ப பெறவேண்டும். தகவல் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான அணுகுமுறை ஆகியவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.