டெல்லி: டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 8ம் தேதி டெல்லி நிஜாமுதினில் தப்லிகி ஜமாத் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களும் அதில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களில் பலர் நாடு முழுவதும் பயணம் செய்திருக்கின்றனர். ஒவ்வொரு உறுப்பினரையும் கண்காணிக்க நாடு தழுவிய முயற்சி இப்போது நடந்து வருகிறது.

சுற்றுலா விசாவில் வந்த அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளையும் கண்காணிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபரும் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்பட வேண்டும் அல்லது மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அப்படி அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சோதனைகளின் முடிவில் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக விவரங்களின் படி, ஜன. 1 முதல் 2100 வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தப்லிகி ஜமாத் அமைப்பினரிடம் தொடர்பில் இருக்கின்றனர்.

பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள், கூறுகையில், சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் தங்குமிடம், பயண டிக்கெட் விவரம், அவர்களின் நிதி தொடர்பான விவரங்கள் கவனமாக ஆராயப்படுவதை உறுதி செய்ய வெளிவிவகார அமைச்சகத்திற்கு குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.