சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் திருடுபோன லேப்டாப்கள் எத்தனை என்ற விவரங்களை அனுப்புமாறு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் சில பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந் நிலையில், தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா லேப்டாப்கள் திருடு போனது தொடர்பான சில விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது.

எனவே, ஆண்டு வாரியாக இதுவரை திருடுபோன லேப்டாப்களின் எண்ணிக்கை, பள்ளிகளின் பெயர், புகார் கொடுத்து இருந்தால் வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை விவரம், மீட்கப்பட்ட லேப்டாப்களின் எத்தனை,  திருடு போன லேப்டாப்களுக்கான தொகையினை அரசுக்கணக்கில் செலுத்திய விவரம் போன்றவற்றை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.