டில்லி

டில்லியில் குறைந்த அளவில் வாக்குப்பதிவு ஏமாற்றத்தை அளிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த மக்களவை தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தன.    அடுத்த கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளன.   அதன் பிறகு  23 ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளி வர உள்ளன.  நேற்று டில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.

நேற்று மாலை ஆறு மணி வரை நடந்த வாக்குப்பதிவில் மிகக் குறைந்த அளவாக புது டில்லியில் 56.47%, வாக்குகள் பதிவாகின.   வடகிழக்கு டில்லியில் 63.45%, சாந்தினி சவுக்கில் 62.69%, மேற்கு டில்லியில் 60.64%, தெற்கு டில்லியில் 57.3%, கிழக்கு டில்லியி8ல் 61.95%, மற்றும் வடகிழக்கு டில்லியில் 58.99% வாக்குகள் பதிவாகி உள்ளன.  டில்லியில் உள்ள மொத்த 1.43 கோடி வாக்காளர்களில் 60.17% வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

டில்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங், “கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் டில்லியில் 65% பேர் வாக்களித்திருந்தனர்.   ஆனால் தற்போது 61%க்கும் குறைவானோரே வாக்களித்துள்ள்னர்.   இது எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகும்.   தேர்தல் விழிப்புணர்வுக்காக ஏராளமான பணம், நேரம்  ஆகியவற்றை செலவழித்தும் இவ்வளவு குறைவான வாக்குப்பதிவு ஏமாற்றத்தை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மற்றொரு மூத்த தேர்தல் அதிகாரி, “இதற்கு முக்கிய காரணம் கோடை விடுமுறையாக இருக்கலாம் என தோன்றுகிறது.  பலரும் நகரை விட்டு விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளனர்.  கடந்த 2010 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.   தற்போது மே மாதம் 12 ஆம் தேதி என்பதால் கடும் வெய்யில் உள்ளது.  அது மட்டுமின்றி வார இறுதியில் இம்முறை வாக்குப்பதிவு நடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.