கொழும்பு

லங்கையில் நடந்த குண்டு வெடிப்பை ஒட்டி தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தடை விதித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று கால 8.45 மணி முதல் இலங்கையில் 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு வெடிப்பு நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்துடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குண்டு வெடிப்பில் ஐஎஸ் இயக்கத்துடன் பங்கு வகித்துள்ளதாக  இலங்கை அரசு தெரிவித்தது. அத்துடன் மற்றொரு இஸ்லாமிய இயக்கமான ஜமாதி மிலாது இப்ராகிம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்களும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு உதவி புரிந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்தது.

இதற்கிடையில் ஐ எஸ் இயக்கம் வெளியிட்ட வீடியோவில் இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவனான ஜகரன் ஹசீம் காணப்பட்டான். அவன் இலங்கை ஓட்டலில் நடந்த தற்கொலைப்படை விபத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு இறந்து விட்டதாக இலங்கை அதிபர் அறிவித்தார்.

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடெங்கும் தீவிர சோதனை நடந்து வருகிறது.  இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்நிலையில் தவ்ஹீத் ஜமாத் ம்ற்றும் ஜமாதி மிலாது இப்ராகிம் ஆகிய இரு அமைப்புக்களுக்கும் தடை விதித்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அந்த இரு இயக்கங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அதிபர் ஆணையிட்டுள்ளார். .

இந்த தடை குறித்து சிறிசேனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமாதி மிலாது இப்ராஹிம் ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த இரு அமைப்புகளும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

ஆதலால் இரு அமைப்புகளின் செயல்பாட்டை முடக்கி, அனைத்துவிதமான சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறேன். மேலும், இலங்கையில் செயல்படும் மற்ற தீவிரவாத அமைப்புகளையும் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.