ஹெல்மெட் அபராதத்தை எதிர்த்து இலங்கை அகதி தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர்

ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்ததால் இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை உண்ட்டாக்கியது.

போக்குவரத்து காவல்துறையினர் தற்போது அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.  லைசன்ஸ் இல்லாத மற்றும் ஹெல்மெட் அணியாதவர்கள் இந்த சோதனையில்  பிடிபடும் போது அவர்களிடம்  அபராதம் வசூலிக்கபடுகிறது.    மாநிலம் முழுவதும் இது போன்ற சோதனைகளும் அபராதம் வசூலிப்பதும் அதிகரித்து வருகிறது.

நேற்று பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நாவுக்கரசன் சோதனையில் ஈடுபட்டார்.   அப்போது அவர் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தார்.   அந்த நேரத்தில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இலங்கை அகதியான சூரிய குமார் என்பவரிடம்  லைசன்சை கேட்டுள்ளார்.

அவரிடம் எல் எல் ஆர் மட்டுமே இருந்துள்ளது.   அதைக் காட்டிய சூரியகுமார் அகதிகளுக்கு லைசன்ஸ் அளிப்பதில்லை என கூறி உள்ளார்.  ஆய்வாளர் அவர் ஹெல்மெட் அணியாததால் அபராதம் கட்ட சொல்லி உள்ளார்.    அதை சூரியகுமார் மறுத்துள்ளார்.   இருவருக்கும் இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

சூரியகுமார் திடீரென அருகிலுள்ள அகதிக்ள் முகாமுக்கு ஓடி ஒரு மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.   அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையில் தீக்குளிக்க முயன்றுள்ளார்.   மக்கள் அவரை தடுத்துள்ளனர்.  அப்போது இலங்கை அகதிகளை பெரம்பலூர் காவல்துறையினர் கேவலமாக நடத்துவதாக அவர் கதறி உள்ளார்.   பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.