சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக,காங்கிரஸ் உள்பட சுயேட்சை வேட்பாளர் என 75 பேர் போட்டியிட்டனர்.

16 ஊராட்சி வார்டுகள் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக, திமுகவுக்கு தலா 8 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். இதனால், அங்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என தேர்தல் அலுவலர் அறிவித்து உள்ளார்.

மற்றப் பகுதிகளில் குலுக்கல் முறையில் தேர்வு பெற்றவர்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம், நேரலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டனர். இதில் வேட்பாளர்கள் வீணா மற்றும் யுவஸ்ரீ ஆகியோர் தலா 849 வாக்குகளை சரிசமமாகப் பெற்றனர்.

இரண்டு வேட்பாளர்கள் சார்பில் பொதுவாக ஒரு நபர் குலுக்கல் சீட்டு எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எடுக்கப்பட்ட குலுக்கல் சீட்டில் வீணாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து வேட்பாளர் வீணா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கான வெற்றிச் சான்றிதழை வேப்பனப்பள்ளி ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார். முன்னதாக இந்நிகழ்வுகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

அதுபோல, திருவண்ணாமலை ஒன்றியம் ஆடையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கலைவாணி மற்றும் தேவதாஸ் என இருவர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது இருவரும் தலா 906 வாக்குகள் என சம வாக்குகளை பெற்றனர். இரண்டாவது முறை எண்ணப்பட்டும் அதே கணக்கே வந்தது. இதையடத்து, தேர்தல் ஆணைய விதிகளின் படி குலுக்கல் முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட சீட்டில்,  கலைவாணி பெயர் வந்தது. இதனால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.