டில்லி:

ச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த தகவல்கள் அரசிதழில் வெளியிட்டப் பட்டது. இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமான ஆணையமாக உருப்பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது,  மத்திய அரசின் திருத்தப்பட்ட  காவிரி வரைவு திட்டத்தினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த உச்சநீதி மன்றம், இந்த அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம்  என்று பெயரிட்டது, மேலும்,  காவிரி மேலாண்மை வாரியத்தை  இந்த பருவத்திற்குள்ளேயே  அமைக்க வேண்டும் என்றும், நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கே உள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும்,   அதைத் தொடர்ந்து பருவமழை தொடங்குவதற்கு முன்னனே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதுகுறித்து அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது தமிழகம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை எந்தவித மேல்நடவடிக்கை யும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையயம் அமைக்கவும், காவிரி வரைவு திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளதாகவும்,  இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் குறித்தும், அதற்கான அதிகாரங்கள் குறித்தும் அரசிதழில் வெளியிட்டப்பட்டது.

இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் தொடர்பான அனைத்து விவரங்களையும் கவனிக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக உருப்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகள் மற்றும் அரசின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.