சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இந்தியா பங்கேற்குமா? : ஐசிசியை நெருக்கும் ‘ஸ்டார்’!

Champions Trophy broadcaster writes to ICC about India’s uncertainty

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்பதை உறுதிப்படுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு, ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது. 2015 முதல் 2023 வரையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 18 டோர்னமென்டுகளை ஒளிபரப்புவதற்கான அதிகார பூர்வ உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.

இவற்றில் ஒன்றான அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன் ட்ராஃபி தொடருக்கான விளம்பரதாரர்களை அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் ட்ராஃபி தொடரில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்திருப்பது, ஸ்டார் நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்திய அணி தொடரில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு ஸ்டார் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் நடவடிக்கையை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு, இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அணியைத் தேர்வு செய்வதற்கான கூட்டத்தை உடனே கூட்ட வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளது. வரும் 7ம் தேதி, டெல்லியில் கூடும் இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.