லண்டன்:

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் அரை இறுதியில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணியினர் பேட்டிங் செய்தனர்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அசார் அலி (59), ஜமன் (114) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆசம் (46), சோயிப் மாலிக் (12) ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஹர்தீக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

வாசிம் (25) மற்றும் ஹபீஸ் (57) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் முடிவில் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் 338 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (0), தவான் (21) ரன்களில் ஆட்டமிழந்தனர். கோஹ்லி (5), யுவராஜ் சிங் (22), தோனி (4), ஜாதவ் (9), ஜடேஜா (15), அஸ்வின் (1), மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா (1) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்தீக் பாண்ட்யா (76) அரை சதம் கடந்துள்ளார். புவனேஷ்வர் குமார் (1) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

போட்டியின் முடிவில் இந்திய அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.