தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் பல  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.  மாநில தலைநகர் சென்னையிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொடர்ந்து 2 நாள் மழை பெய்தது. நேற்று சற்று வெயில் தெரிந்த நிலையில், இன்று மீண்டும் வெயில் மழை இன்றி வானம் மேகமூட்டமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை மையம்  தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவிழந்து வளிமண்டல சுழற்சியாக நீட்டிப்பதன் காரணமாக திருவண்ணாமலை, சேலம், வேலூர், தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  சில இடங்களில் விட்டு விட்டு  மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.