திருவனந்தபுரம்

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு அம்மாநிலத்தில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கேரள மாநிலத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவினர் வேட்பாளர்களை அறிவித்தும் காங்கிரஸ் காலதாமதம் செய்தது. அத்துடன் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்னும் செய்தியை காங்கிரஸ் தலைமை உறுதி செய்யாமல் இருந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்னும் அறிவிப்பு வெளியாகியது. அத்துடன் பலரும் எதிர்பார்த்த கே முரளிதரன் வடக்கரா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி ஜெயராஜனை எதிர்த்து போட்டியிடுவார் என்னும் அறிவிப்பும் நேற்று தான் வெளியானது. வாக்கெடுப்புக்கு இன்னும் 22 நாட்கள் இருக்கையில் இந்த அறிவிப்புக்கள் வெளியாகின.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி நகரத் தொடங்கி விட்டது என சொல்லலாம். பிரதமர் வேட்பாளர் கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுவது அந்த கட்சிக்கு தனி மதிப்பை மாநிலத்தில் அளித்தது. ஏற்கனவே வயநாடு காங்கிரஸ் கோட்டை என்பதால் ராகுல் காந்தி அந்த தொகுதியில் நிற்க விரும்பியதாக சொல்லப்பட்டது.

தற்போது மாநிலம் முழுவதுமே ராகுல் காந்தியின் தாக்கம் காங்கிரசுக்கு ஒரு தனி மதிப்பை அளித்துள்ளது. அது மட்டுமின்றி தாமதமாக அறிவிக்கப்பட்டாலும் கேரள மாநிலத்தை பொறுத்தவரை அறிவிக்கப்பட்ட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களுமே வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தெற்கு கேரள பகுதிகளில் சபரிமலை விவகாரத்தின் தாக்கம் கம்யூனிஸ்ட்களுக்கு பின்னடவை ஏற்படுத்தும் நேரத்தில் அதனால் காங்கிரஸ் பயனடைய வாய்ப்புள்ள்தாக கூறப்படுகிறது அத்துடன் திருவனந்தபுரம் தொகுதியில் சென்ற தேர்தலின் போது மோடி அலை வீசிய போதே சசிதரூர் வெற்றி பெற்றார்.

தற்போது அவர் மேலும் வலுவடைந்துள்ளதால் பாஜக தலைவர் கும்மாணம் ராஜசேகரன் நிறுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.  மேலும் இந்த தேர்தலில் சசி தரூருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மூன்றாம் இடத்தை பிடிப்பார் எனவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.