மீண்டும் பணி புரிய விரும்பும் விடுப்பில் உள்ள வங்கி அதிகாரி

மும்பை

சிஐசிஐ வங்கியில் நடந்த மோசடி காரணாமாக விடுப்பில் அனுப்பப்பட்ட பெண் வங்கி அதிகாரி சந்தா கோச்சர் மீண்டும் பணி புரிய விரும்புவதாக கூறப்படுகிறது.

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகோன் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடி கடன் கொடுக்கப்பட்டது.   வீடியோகோன் நிறுவனம் அந்த கடனை திருப்பிச் செலுத்தவில்லை.     அதை ஒட்டி நடந்த விசாரணையில்  அந்த வங்கியின் தலைமை அதிகாரியாகவும் நிர்வாக இயக்குனராகவும் இருந்த சந்தா கோச்சர் மீது பல புகார்கள் எழுந்தன.

வீடியோகோன் அதிபர் தாம் நடத்தி வந்த மற்றொரு நிறுவனத்தை சந்தா கோச்சரின் கணவருக்கு அளித்து இந்தக் கடன் பெற்றதாக எழுந்த புகாரை ஒட்டி சந்தா கோச்சரை விடுப்பில் செல்லுமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டது.   அதனால் அவர் தற்போது விடுப்பில் உள்ளார்.   கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதை ஒட்டி இந்த வங்கியின் கிழுள்ள நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் நிறுவன துணை பொது மேலாளர், “தற்போது விடுப்பில் இருக்கும் சந்தா கோச்சர் மீண்டும் தாம் பணியில் இணைய விரும்புவதாக கூறி உள்ளார்.   அந்த விவகாரம் குறித்து ஆலோசித்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.