மீண்டும் பாரதீய ஜனதாக் கூட்டணியில் இணைய விரும்புகிறாரா சந்திரபாபு நாயுடு?

ஐதராபாத்: அரசியலில் தனது ஸ்திரத்தன்மையைப் பலப்படுத்திக்கொள்ள, மீண்டும் பா.ஜ. கூட்டணியில் சேர முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்புவதாகவும், ஆனால், இணைய வேண்டுமானால் அவர் பொது மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று பாரதீய ஜனதா தரப்பில் நிபந்தனை விதிக்கப்படுவதாகவும் அக்கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்துவந்த சந்திரபாபு நாயுடு, தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் பக்கம் மாறினார். அதுமட்டுமின்றி, மற்ற எவரையும்விட, பாரதீய ஜனதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

இதில் கவனம் செலுத்தியதால், ஆந்திர சட்டசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இவரால் சரியாக கவனம் செலுத்த முடியாமல் மோசமாக தோல்வியடைந்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால், தற்போது ஆந்திராவின் புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தன் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரைப் பாதுகாக்க, இவர் மீண்டும் பழைய கூட்டணிக்கே திரும்ப விரும்புவதாக பாரதீய ஜனதா தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இவரின் கடந்தகால செயல்பாடுகளை மறக்காத அக்கட்சித் தலைமை, இவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற நிபந்தனையை விதித்திருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம், ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றும் சிலர் கூறுகின்றனர்.