சந்திரபாபு நாயுடுவின் அமராவதி சுற்றுப்பயணத்தில் பேருந்தின் மீது கல் வீச்சு!

அமராவதி: இந்த ஆண்டு மே மாதம் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மாநில தலைநகரில் கடந்த ஆறு மாதங்களாக நிறுத்தப்பட்ட பணிகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை தனது அமராவதி சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். பயணத்தின் போது அவரது பேருந்தின் மீது கற்கள் வீசப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளானபோது ராயபுடி அருகே பதற்றம் நிலவியது.  கறுப்புக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு, ‘நாயுடு கோ பேக்’ என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த போராட்டக்காரர்கள், நாயுடு மற்ற கட்சித் தலைவர்களுடன் பயணம் செய்த பேருந்தின் மீது கற்களை வீசினர். யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. நாயுடுவின் பயணக் குழு இருந்த பேருந்தின் மீது ஒரு செருப்பு வீசப்பட்டதும் காணப்பட்டது.

இருப்பினும், நாயுடுவுடன் வந்த தலைவர்களும் தொழிலாளர்களும் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீஸ் படைகள் அப்பகுதிக்கு விரைந்தன.

ஆளும் கட்சித் தொழிலாளர்கள் தான் கற்களை வீசியதாக டிடிபி தலைவர்கள் குற்றம் சாட்டினர். எவ்வாறாயினும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தனர், அவர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொடர்பாக நாயுடுவின் வருகையை விவசாயிகளில் ஒரு பகுதியினர் எதிர்க்கின்றனர் என்று சுட்டிக்காட்டினர்.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சிக்கு வந்தபின் இடிக்கப்பட்ட ஒரு கூட்ட அரங்கான பிரஜா வேதிகாவிலிருந்து தெலுங்கு தேசக் கட்சித்  தலைவரான சந்திர பாபு நாயுடு தனது பயணத்தைத் தொடங்கினார்.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி  யிடம் அதிகாரத்தை இழந்த பின்னர் நாயுடு அமராவதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.. ‘தெலுங்கு சுய மரியாதையின் சின்னத்தை’ பாதுகாக்க அமராவதிக்கு வருவதாக நாயுடு அறிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 22, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் மாநில தலைநகருக்கு அடிக்கல் நாட்டப்பட்ட உத்தண்டராயுனிபாலம் கிராமத்திற்கு டிடிபி தலைவர் சென்றார். பகல்நேர பயணத்தின் போது, ​​மாநில தலைநகருக்காக  தங்கள் நிலங்களை வழங்கிய விவசாயிகளை சந்திப்பார் என்றும்  தமது ஆட்சியின் போது தொடங்கப்பட்ட பணிகளையும் பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான வார்த்தைப் போருக்கு மத்தியில் நாயுடு அமராவதிக்கு வருகை தருகிறார். ஜெகன் மோகன் ரெட்டி எல்லாப் பணிகளையும் நிறுத்துவதன் மூலம் “அமராவதியைக் கொன்றார்” என்று நாயுடு குற்றம் சாட்டினார்.

அமராவதியைப் பார்வையிட டிடிபி தலைவருக்கு தார்மீக உரிமை இல்லை என்று ஒய்.எஸ்.ஆர்.சி.பி கூறியது, ஏனெனில் அவரால் ஐந்து ஆண்டுகளில் ஐந்து சதவீத பணிகளை மட்டுமே முடிக்க முடிந்தது என்றும், மேலும் அவற்றில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் கூறியது.

ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியை “அழித்துவிட்டார்” என்று குற்றம் சாட்டிய நாயுடு, உலக வங்கி, சிங்கப்பூர் கூட்டமைப்பு மற்றும் பலர் அமராவதி திட்டத்திலிருந்து விலகியுள்ளனர் என்றார். “ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் ஐந்து கோடி மக்களின் எதிர்காலத்தை அழித்து வருகிறார்” என்றும் அவர் கூறினார்.

அமராவதியை ஒரு மயானத்துடன் ஒப்பிட்டதற்காக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் போட்சா சத்தியநாராயணனையும் நாயுடு கண்டித்தார். “நீங்கள் கல்லறையிலிருந்து வேலை செய்கிறீர்களா? “, என்று மாநில செயலகமும் இங்கு செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி டிடிபி தலைவர், அமைச்சரிடம் கேட்டார்.