ஆந்திரா : சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் உண்ணாவிரதம்

திருப்பதி

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குள் அனுமதிக்கப்படாததால் விமான நிலையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மாநிலத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  விரைவில் ஆந்திராவில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளதால் இந்த போராட்டங்கள் தீவிரம் அடைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து வருகின்றன.

இதில் ஒரு கட்டமாகத் திருப்பதி, சித்தூர், மதனபள்ளி பகுதிகளில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் செய்யத் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு விமானம் மூலம் நேற்று ரேணி குண்டா வந்துள்ளார்.  கொரோனா பாதுகாப்பு விதிகள் காரணமாகத் திருப்பதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் காவல்துறையினர் அவரை திருப்பதிக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதையொட்டி காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.  உணவு, குடிநீர் எதுவும் உட்கொள்ளாமல் சுமார் 8 மணி நேரம் அவர் உண்ணாவிரதம் இருந்தார்.  அதன்பிறகு காவல்துறை அதிகாரிகள் சமாதான பேச்சு நடத்தி அவரை ஐதராபாத் விமானத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.