ஒருமித்த கருத்தோடு ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்: சந்திரபாபு நாயுடு

புதுடெல்லி:

தேர்தல் முடிவுக்குப் பிறகு ராகுல் காந்தியை பிரதமராக்க எதிர்கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டுவோம் என தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லோரையும் மிரட்டுதையே பிரதமர் மோடி குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.

ராகுல் காந்தி நல்லவர். தேர்தல் முடிவுகளுக்குப் பின் ராகுல்காந்தியை பிரதமராக்க ஒருமித்த முடிவை எதிர்கட்சிகள் எடுப்போம்.

ஆந்திரா புதிய மாநிலமாக உருவெடுத்துள்ளது. ஆந்திராவை வளர்ச்சி பெற செய்ய வேண்டியுள்ளது.
எங்கள் மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகள் தான் உள்ளன. எனினும் இந்த நாட்டுக்காக எங்களது பங்கேற்பும் இருக்கும்.

கடந்த 1996-ம் ஆண்டு எதிர்கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி அரசை உருவாக்க முயன்றோம். காங்கிரஸ் அந்த அரசில் பங்கேற்கவில்லை.

வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.
அது போன்ற நிலை இனி இருக்காது. மே 23-ம் தேதி எதிர்கட்சிகள் அமர்ந்து இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்வோம்.

பிரதமர் மோடி ஒவ்வொரு பிரச்சாரத்திலும் எதிர்கட்சிகளை மோசமாக விமர்சிக்கிறார். தேர்தலில் படுதோல்வி அடையப் போவதை அவர் உணர்ந்திருக்கிறார்.

மோடி ஆட்சிக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் அவர் புல்வாமா தாக்குதலையும், பால்கோட் விமானப் படை தாக்குதலையும் பேசிக் கொண்டிருந்தார் என்றார்.