விஜயவாடா: ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“இது ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான ஒரு தொலைநோக்கு ஆவணம்” என அத்தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார். அவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஒன்றுமில்லாதது என்றும் தாக்கினார்.

விவசாயிகள் மற்றும் பெண்களின் நம்பிக்கையை பெறும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன. அன்னததா சுகிபவா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.15.000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு, சுயஉதவிக் குழுக்களை சார்ந்த பெண்களுக்கு ரூ.10.000 கிடைக்கவல்ல பசுபுகுன்குமா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சுயஉதவிக் குழு பெண்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் ஃபோன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 65லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது மற்றும் ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.3000 பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டிற்கு ரூ.18.000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி