நிலவை நெருங்குகிறது சந்திரயான்2: சுற்று வட்டப்பாதை மாற்றியமைப்பு

ஸ்ரீஹரிகோட்டா:

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 விண்கலம் நேற்று புவி வட்டப்பாதை யில் இருந்து நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தப்பட்ட நிலையில், இன்று நிலவின் சுற்று வட்டபாதை  முதன் முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்த இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 2 விண்கலம், கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.  22 நாட்களாக புவி வட்டப் பாதையை சுற்றி வந்தபோது, அதன்  சுற்று வட்டப்பாதை 5முறை  உயர்த்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை அதிகாலை 2.21 மணி அளவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்2-ஐ புவி வட்டப் பாதையில் இருந்து விலக்கி, அதில் உள்ள திரவ எரிபொருள் எஞ்சினை இயக்க வைத்தனர்.  அதைத்தொடர்ந்து  நிலவின் வட்டப் பாதையை நோக்கி சந்திரயானை  திருப்பி விட்டனர். தற்போது சந்திரயான்2 நிலவை  நோக்கி பயணித்து வருகிறது.

நிலவின் சுற்று வட்டப்பாதையை  சுற்றி வந்த சந்திரயான்2 விண்கலத்தின் பாதை இன்று பகல் 12.50 மணிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.

தற்போது நிலவை சுற்றி வரும் சந்திரயான் நிலவுக்கு அருகில் வந்துள்ளதாகவும், தொடர்ந்து ஆகஸ்டு 28 ம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் சந்திரயான்2  நிலவின் சுற்றுப்பாதை 2வது முறையாக மாற்றப்பட உள்ளதாகவும், பின்னர் செப்டம்பர் 1ந்தேதி அன்று மீண்டும் மாற்றி அமைகக்கப்பட உள்ளதாகவும்  இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்று வட்டப் பாதையை சந்திரயான் 2 அடைந்த தும், விக்ரம் லேண்டர் மூலம், பிரக்யான் ரோவர் நிலவில் தரை இறக்கப்படும். செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அது நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். நொடிக்கு ஒரு செண்டி மீட்டர் என்ற வேகத்தில், பிரக்யான் ரோவர் இயங்கும். ஆனால் விக்ரம் லேண்டரை நிலவில் தரை இறக்கும் அந்த 15 நிமிடங்கள் பரபரப்பாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.