ஸ்ரீஹரிகோட்டா

நிலவை நோக்கிப் பயணிக்கும் சந்திரயான் 2 விண்கலம் ஐந்து விண்வெளி அடுக்குகளில் இரண்டாம் அடுக்கில் நுழைந்துள்ளது.

கடந்த 22 ஆம் தேதி மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.   ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம்  நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதை அடைய விண்வெளியில் உள்ள ஐந்து அடுக்குகளை இந்த விண்கலம் கடக்க வேண்டி உள்ளது.

இந்த விண்கலம் தற்போது விண்வெளியின் முதல் அடுக்கை வெற்றிகரமாகக் கடந்து இரண்டாம் அடுக்குக்குள் நுழைந்துள்ளது.  இவ்வாறு இன்னும் 4 அடுக்குகளைக் கடந்த பிறகு நிலவின்  சுற்றுப்பாதையில் சந்திரயான் நுழைய உள்ளது.  முதல் அடுக்கான 230 x 45.163 கிமீ சுற்றில் இருந்து தற்போது இந்த விண்கலம் 251 x  54829 கிமீ அடுக்கில் நுழைந்துள்ளது.  இறுதி அடுக்கு 221 x 143585 கிமீ ஆகும்.  இந்த அடுக்கில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சந்திரயான் நுழைய உள்ளது.

இஸ்ரோ அதிகாரி ஒருவர், ”இன்னும் உள்ள 4 அடுக்குகளைக் கடக்க எடுத்துக் கொள்ள நேரம் குறித்து நாங்கள் ஏற்கனவே கணக்கிட்டுள்ளோம்.  ஆயினும் இதில் சிறிய மாறுதல்கள் உண்டாக வாய்ப்புள்ளது.  இந்த விண்கலத்தின் பயணத்தை ஒரு குழு ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகிறது.   இந்த விண்கலம் முழுவதும் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.  எனவே இதில் தேவையான மாறுதல்களைச் செய்ய முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.