ஸ்ரீஹரிகோட்டா:

நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் அனுப்பப்படும் சந்திராயன்2 விண்கலம்  திட்டமிட்டபடி இன்று மதியம் விண்ணில் பாய்கிறது. சந்திராயன்2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் ஆர்வத்துடன் கவனித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள சந்திராயன்-2 விண்கலம், ஏற்கனவே  கடந்த 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்பட இருந்த நிலையில், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்கள் இருக்கும்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டு ராக்கெட் ஏவுவது நிறுத்திவைக்கப்பட்டது.

அந்த தொழில்நுட்பக் கோளாறை விஞ்ஞானிகள் கண்டறிந்து உடனே சரிசெய்ததைத் தொடர்ந்து, மீண்டும் 22ந்தேதி (திங்கள்கிழமை)  பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணுக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான இறுதிக்கட்ட பணிகள் அனைத்தையும் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன்,  சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இனிமேல் தொழில்நுட்பக் கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை. சந்திரயான்- 2 விண்கலம்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என்றார்.

மேலும்,  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.43 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கி உள்ளது. விண்ணில் ஏவிய பிறகு 48 நாள் 15 கட்டங்களைக் கடந்து நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 இறங்கும். சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்றார்.