ஸ்ரீஹரிகோட்டா:

விண்ணில் பாய்ந்த சந்திராயன்-2 விண்கலம் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்றும், இந்தியாவின் நிலவு நோக்கிய பயணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தினம் இது, இந்தியா மட்டுமின்றி உலகமே இதை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதமாக தெரிவித்தார்.

இஸ்ரோ அறிவித்தபடி   நிலவை ஆராய்ச்சி செய்ய உள்ள சந்திராயன்2  விண்கலம் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று மாலை தொடங்கியது. திட்டமிட்டபடி இன்று மதியம் 2.43 மணிக்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.  விண்ணுக்கு ஏவப்பட்டு 16வது நிமிடத்தில் புவி வட்டப் பாதையை அடைந்தது.

இஸ்ரோவின் வெற்றிகரமான இந்த திட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இன்றைய சாதனை இஸ்ரோவின் வரலாற்றில் புதிய மைல் கல் எனத் தெரிவித்தார். இந்த சாதனை, விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த பணியால்  சாத்தியமானது என்றும்  கூறியவர், கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது என்று சக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 15ம் தேதி ஏவப்பட இருந்தபோது, கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய அமைக்கப்பட்ட குழு 7 நாட்களாக  உறங்காமல் தீவிரமாக பணியாற்றி தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

தங்களின் அடுத்த இலக்கு  சந்திராயன்2 விண்கலத்தில் உள்ள ஆய்வு ஊர்தியை  நிலவின் தென் துருவத்தில் இறக்குவதுதான் என்றவர்,  சந்திராயன்2 தொடர்ந்து 47 நாட்கள் பயணித்து நிலவை சென்றடையும் என்றார்.

நிலவை சென்றடைந்த பிறகே, அதிலிருந்து விக்ரம் விண்கலம் தனியாக பிரிந்து நிலவில் கால் பதிக்கும் என்றவர், அதையடுத்த 4 மணி நேரத்திற்கு பின்பே, விக்ரமில் இருந்து  ஊர்ந்து சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளும் பிரக்யான் விண்கலம் தனது ஆய்வுப்பணியை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

பிரக்யான் விண்கலம் 14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதே நேரத்தில் சந்திரயான் -2 விண்கலம் ஓராண்டு காலம் நிலாவை சுற்றி, சுற்றி வந்து ஆய்வில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

(மாதிரி படம்)

இந்த ஆய்வின் மூலம் நிலாவின் தென்துருவத்தில் தண்ணீர் உள்ளதா,வேறு என்னென்ன தனிமங்கள் உள்ளன, நிலாவின் தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட உள்ளன. நிலாவில் விக்ரம், பிரக்யான் கலங்கள் திட்டமிட்டபடி தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின்னர் இது போன்ற ஆய்வில் ஈடுபட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று என்று தெரிவித்தவர் அடுத்தடுத்து பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டு உள்ளோம்  என்றும் கூறினார்.