ஸ்ரீஹரிகோட்டா:

மீப காலங்களில் நிலவின் தென்துருவ ஆராய்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சீனா ஆய்வு மையத்தினை அமைக்க உள்ளதாகவும், நாசா 2024 ல் மனிதர்களை தென் துருவத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கையில் இந்தியாவில் சந்திராயன் 2 மூலமாக நிலவின் தென் துருவத்தில்  ரோவன் ஒன்றை தரையிறக்க உள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

பல தடைகளுக்குப் பிறகு சந்திரயான்2  GSLV-MkIII  ஏவூர்தி வழியாக  ஜூலை 5 முதல் ஜூலை 16 க்குள் அனுப்பப்படும் என்றும், செப்டம்பர் 6ம் தேதி வாக்கில் சந்திரனில்  தரையிறங்கும் என்றும், மிகச்சரியாக தென்துருவத்தில் தரையிறங்கினால் உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடாக இந்தியா விளங்கும் என்றும் தெரிவித்தார்

நிலவின் தென்துருவத்தில் யாரும் இதுவரை செல்லாததால் நமக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்றார்.

நாசாவின் கருத்துப்படி, சந்திர மண்டல தென் துருவத்தின் சில பகுதிகள், சூரிய  ஒளி  படாததால் குறைந்த வெப்ப வெப்பநிலையும்,  பனிக்கட்டிகளும் இருக்கும். எனவேதான் சந்திரயான் திட்டத்தின் இன்னொரு முக்கிய காரணம் நிலவின் தண்ணீரை கண்டறிவதும் என்பதால் உலக நாடுகளால் இந்த ஆய்வு உற்று நோக்கப்படுகிறது.

-செல்வமுரளி