வரும் 2021 ல் சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

டில்லி

ந்திரயான் 3 விண்கலம் அமைக்கப்பட்டு வருவதாகவும் வரும் 2021 ஆம் வருடம் அது விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் லட்சிய திட்டமான சந்திரயான் 2 விண்கலம் கடைசி நேரத்தில் தோல்வி அடைந்தது.   அந்த விண்கலத்தின் விக்ரம் லாண்டர் நிலவில் இறங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது.  மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் லாண்டரை கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்றும் முடியவில்லை.    ஆயினும் ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி இன்னும் வலம் வருவதால் அது முழுத் தோல்வி அடையவில்லை என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்,

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று சந்திரயான் 3 விண்கலம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.   அது குறித்து இஸ்ரோவின் தலைவர் சிவன் செய்தியாளர்களிடம், “மத்திய அரசு சந்திரயான் -3 க்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்த திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், இது முடிவடைய 14-16 மாதங்கள் ஆகலாம் என்பதால் வரும் 2021ஆம் வருடம் விண்ணில் செலுத்தப்படும்.

இந்தியாவில் இரண்டாவது விண்வெளி மையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைய உள்ளது.

நாம் சந்திரயான் 2  மூலம் விண்வெளித்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். நம்மால் வெற்றிகரமாகத் தரையிறங்க முடியவில்லை என்றாலும், ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது.  அடுத்த 7 ஆண்டுகளுக்கு இது விஞ்ஞான தரவுகளைத் தயாரிக்கச் செயல்பட  உள்ளது

ஒரே நேரத்தில் சந்திரயான், ககன்யான் திட்டங்களில் இஸ்ரோ பணி செய்ய உள்ளது.   ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சி ரஷ்யாவில் ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது” எனத் தெரிவித்தார்.