ஸ்ரீஹரிகோட்டா:

ந்திரயானின் பயணம் சீராக சென்றுகொண்டிருக்கிறது என்றும்,  சந்திரயான் 2 செயற்கைக் கோளின் புவி சுற்றுவட்டப்பாதை முதல்முறையாக உயர்த்தப்பட்டது எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.

நிலவை ஆராய்ச்சி செய்ய உள்ள சந்திராயன்2  விண்கலம் கடந்த 22ந்தேதி  2.43 மணிக்கு  வெற்றிகரமாக  ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் மூலம் விண்ணில் பாய்ந்தது.  விண்ணுக்கு ஏவப்பட்டு 16வது நிமிடத்தில் புவி வட்டப் பாதையை அடைந்தது. தொடர்ந்து 47 நாட்கள் பயணித்து நிலவை சென்றடைய உள்ளது.

அதன்பிறகு, அதிலிருந்து விக்ரம் விண்கலம் தனியாக பிரிந்து நிலவில் கால் பதிக்க இருக்கிறது. அதையடுத்த 4 மணி நேரத்திற்கு பின்பே, விக்ரமில் இருந்து  பிரக்யான் விண்கலம் வெளியேறி, நிலவில் ஊர்ந்து சென்று ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது.

அப்போது, நிலாவின் தென்துருவத்தில் தண்ணீர் உள்ளதா,வேறு என்னென்ன தனிமங்கள் உள்ளன, நிலாவின் தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட உள்ளன.

இந்த நிலையில், விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் விண்கலம் தனது பயணத்தை நோக்கி வெற்றி கரமாக சென்றுகொண்டிருப்பதாகவும், அதன் புவி சுற்றுவட்டப்பாதை முதல்முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும்  இஸ்ரோ தகவல் வெளியிட்டு உள்ளது.

சந்திராயன்2 புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை அடைந்ததும், சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும் ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான்-2 விண்கலம் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்ற தொடங்கியது.

அதாவது பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் பூமியை சுற்றி வந்தது. இந்த நிலையில், முதன் முதலாக சந்திரயான்-2 விண்கலத்தின் உயரம் நேற்று பிற்பகல் 2.52 மணிக்கு அதிகரிக்கப்பட்டது.

அப்போது சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள மோட்டார் இயக்கப்பட்டது. இந்த மோட்டார் 90 வினாடிகள் இயங்கியதன் மூலம் விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்திரயான்-2 விண்கலம் தற்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 241.5 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,162 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வருகிறது.

இரண்டாவது தடவையாக நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 1 மணிக்கு சந்திரயான்-2-ல் உள்ள மோட்டார் மீண்டும் இயக்கப்பட்டு, விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்படும். அதன்பிறகு திங்கட்கிழமை மூன்றாவது தடவையாக சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்படும்.

நான்காவது தடவையாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படும். அப்போது சந்திரயான்-2 பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செல்லும். அதன்பிறகு நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 படிப்படியாக அதை நெருங்கும். செப்டம்பர் 7-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் சந்திரனில் தரை இறங்கும்.

சந்திரனை நெருங்கியதும் ஆர்பிட்டர் சுற்றி வர அதில் இருந்து விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவ பகுதியில் மெதுவாக இறங்கும். பின்னர் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவின் தரை பரப்பில் நகர்ந்து சென்று சந்திரனில் கனிமங்கள், நீர் மூலக்கூறுகள் இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளும். மேலும் அதுபற்றி தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பும்.