தொடர்ந்து தள்ளிப்போகும் ‘சந்திரயான் – 2’ திட்டம் – இஸ்ரேல் முந்துமா?

--

புதுடெல்லி: மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது ரூ.800 கோடி மதிப்பிலான சந்திரயான் – 2 திட்டம். இந்தியாவின் 2வது நிலவுத் திட்டமான இத்திட்டம், இதுவரை 4 தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் சில காரணங்களால், அதே ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், அப்போதும் அது செயல்பாட்டிற்கு வராமல், 2019ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தவர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே. திட்டம் இந்தாண்டு ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், ஏப்ரலிலும் எதுவும் நடக்காமல், தற்போது நான்காவது முறையாக, மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில், விண்கலத்தை இறக்கி இதுவரை 3 நாடுகள்தான் சாதனைப் படைத்துள்ளன. அவை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா.

அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்ற ஆவலோடு காத்திருப்போருக்கு இந்த ஒத்திவைப்பு விஷயம், மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் தருவதாக அமைந்துள்ளது.

ஏப்ரல் மாதம் 11ம் தேதி, இஸ்ரேலின் பியர்ஷீட் நிலவு விண்கலம், சந்திரனின் மேற்பரப்பில் இறங்கும் வகையில் ஏவப்படவுள்ளது. அந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்துவிட்டால், நான்காம் நாடு என்ற பெருமையை இஸ்ரேல் பெற்றுவிடும். ஒருவளை, இஸ்ரேலின் முயற்சி தோல்வியடைந்தால், இந்தியாவுக்கு மற்றுமொரு வாய்ப்பு காத்திருக்கிறது.

– மதுரை மாயாண்டி