ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம்: தமிழக அரசு

ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதனால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கி உள்ள நிலையில், அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம் செய்துள்ளது தமிழகஅரசு.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பை முறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 முதல் மே 17 வரை பணிக்கு வராத அரசு ஊழியர்கள், பணிக்கு வந்ததாக கருதப்படுவர்.
மே 18-ம் தேதிக்குப் பின் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் அரசு அலுவலகங் கள் செயல்பட்ட போது, குறைந்த பட்ச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டும், பணிக்கு வரவில்லையென்றால் அது விடுப்பாகவே கருதப்படும்.
மே 18-ம் தேதிக்குப் பின் விடுப்பில் இருந்த ஊழியர்கள் அதற்கான விடுமுறை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
கொரோனா அறிகுறி இருந்து விடுப்பில் இருந்தாலோ, அல்லது குடும்பத்தினரில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு பகுதியில் வசித்தாலோ அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்பித்தால் அது ஊதியப் பிடித்தம் இல்லாத சிறப்பு விடுப்பாக கருதப்படும்.
கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரவில்லையென்றாலும் அது பணிக்காலமாகவே கருதப்படும்.
தமிழக அரசின் அனைத்து வகை ஊழியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு இது பொருந்தும்.
இவ்வாறு  அதில் கூறப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி