தேர்தல் தேதியை மாற்றுங்கள்: ஆட்சியர் கூட்டத்தில் இருந்து அரசியல் கட்சியினர் வெளிநடப்பு…

மதுரை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் புகழ்மிக்க மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெறுவதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற  கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தேர்தல் தேதியை மாற்றுங்கள் என்று வலியுறுத்தி,  இன்று நடைபெற்ற ஆட்சியர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து அரசியல் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 18ந்தேதி, மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருப்பதால், வாக்குப்பதிவில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

வரலாற்று புகழ்பெற்ற  சித்திரைத் திருவிழாவில் தென்மாவட்ட மக்கள் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வர். இதன் காரணமாக அன்றைய தினம் நடைபெறும்  தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையடுத்து, சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு இருந்தார்.  இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக  மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று 2-வது நாளாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் நடைபெறும் நாளில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மதுரை தொகுதி மக்களவை தேர்தலை தள்ளி வைக்க இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசியல் கட்சியினர், சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடத்தினால் 50 சதவிகிதம் கூட வாக்கு பதிவாக வாய்ப்பில்லை என்று கூட்டாக தெரிவித்தனர்.

மேலும், சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றவர்கள்,  அரசு கவனம் செலுத்தி தேர்தல் தேதியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதி மன்றம், தேர்தல் ஆணையத்துக்கும், மதுரை ஆட்சியருக்கும் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி