அரசு மாறினால் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு…..ராகுல்காந்தி

டில்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டில்லியில் உள்ள சுமார் 100 பெண் பத்திரிக்கையாளர்களுடன் இன்று கலந்துரையாடினார். அது குறித்த விபரம்…

அரசு மாறினால் அனைத்தும் மாறும்

நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், கும்பல் தாக்குதல் போன்றவை குறித்து பெண் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ராகுல் பதில் கூறுகையில்,‘‘ தலைமை மாற வேண்டும். இது போன்ற சம்பவங்களை அரசு ஊக்குவிப்பது தான் காரணம். இந்த அரசு மாறினால் இந்த சம்பவங்களும் நின்றுவிடும்.

சிவசக்தி மீது நம்பிக்கை

நீங்கள் பெண்ணியவாதியாக இருந்தால்….? என்ற கேள்வி ராகுலிடம் கேட்கப்பட்டது. இதற்கு
அவர் பதில் கூறுகையில்,‘‘இது மேற்கத்திய சித்தாந்தம். எனக்கு சிவசக்தி மீது தான் நம்பிக்கை. ஆண், பெண் என இருபாலரும் மனித இனம் தான் என நான் நம்புகிறேன். பெண்ணியம் என்பது இருவரையும் தனித்தனியாக பார்ப்பது தான். நாம் ஒவ்வொருவரையும் அதே மாதிரி தான் பார்க்க வேண்டும்’’ என்றார்.

காங்கிரஸில் பெண்கள் இடஒதுக்கீடு

மகளிர் இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியில் மகளிர் பங்கு குறித் கேள்வி கேட்கப்பட்டது. சமீபத்தில் அமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியில் மகளிருக்கு 14 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுப்ப்ப்டடது.

இதற்கு அவர் பதில் கூறுகையில்,‘‘காங்கிரஸ் கட்சியில் மகளிர் தலைவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். இதை மாற்றும் நோக்கத்தோடு பணியாற்றி வருகிறேன். பயிற்சி மற்றும் தயாரிப்பு மூலம் பெரிய தலைவர்களை உருவாக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் பல பெண்கள் இருக்கிறார்கள்.

ஆனால், கட்சியின் மூத்த பதவியை திடீரென தூக்கி அவரிடம் ஒப்படைக்க முடியாது. இது சரியாகவும் இருக்காது. இதை அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இது தான் எனது பணி. கூடிய விரைவில் காங்கிரஸ் கட்சியில் அதிக பெண்களை பார்க்கலாம்’’ என்றார்.

பிரதமர் பதவிக்கு யார்?

பிரதமராக மாயாவதி அல்லது மம்தா பானர்ஜி வருவது குறித்த கேள்விக்கு ராகுல்காந்தி பதில் கூறுகையில்,‘‘ இதற்கு மறுப்பு ஏதும் கிடையாது. பாஜக.வை தூக்கி எறிய வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. இது தான் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நோக்கம்’’ என்றார்.