‘சேஞ்சிங் இந்தியா’: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய புத்தகம் வெளியீடு

டில்லி:

‘சேஞ்சிங் இந்தியா’ என்ற தலைப்பில், தொகுக்கப்பட்டுள்ள  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கைப்பயணம், பொருளாதாரம், அரசியல் பயணம்  பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

6 தொகுதிகள் கொண்ட இந்த புத்தகத்தை  ‘ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்’ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்த பொருளாதார மேதையும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின், வாழ்க்கை, பொருளா தாரம், அரசியல் பயணம் குறித்து இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது.

6 தொகுதிகளை கொண்ட இந்த புத்தகத் தொகுப்பில், முதல் 4 தொகுதிகளில், ‘இந்தியாவின் ஏற்றுமதிப் போக்குகளும் தன்னிறைவு கொண்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளும்’, ‘வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு பற்றிய சிந்தனைகள்’, ‘சர்வதேச பொருளாதார நிலையும் மேம்பாட்டில் சமத்துவத்துக்கான தேடலும்’, ‘பொருளாதாரச் சீர்திருத்தங்கள்:1991க்குப் பிறகு’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

கடைசி இரண்டு தொகுப்புகளும்,  ‘பிரதமர் பேசுகிறார்’ என்ற தலைப்பில் வெளியிடப்பபட்டு உள்ளது. இதில் அவரது அரசியல் பயணம் தொகுக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டு கால பிரதமர் பதவி மற்றும் அப்போதையே அனுபவங்களை தாங்கி இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.