வக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் -பகுதி 2

வக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும் பற்றிய நேற்றைய பதிவின் தொடர்ச்சி :-

6.சுக்கிரன் :-

சுக்கிரன் களத்ர காரகன் என்று ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.

அறுபத்து நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்கிரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்கிரனே.

ஆபரணம், இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, வீடு கட்டுதல் ஆகியவற்றுக்குக் காரணமாக சுக்கிரன் விளங்குகிறார்.

7.சனி :-

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனீஸ்வரர். யமனின் தமயன் இவர். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனீஸ்வரரே.

ஆயுள் காரகன் என்று ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்குக் காரணம் இவரே. அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர். வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளத்தனம், மது, எள், தானியம், இரும்பு, வாதம், மரணம், மருத்துவமனை, பயந்த கண்கள், மனது வெறுக்கக்கூடிய செய்கை, இளமையில் முதுமை ஆகியவற்றுக்குக் காரணம் வகிக்கிறார்.

8.ராகு :-

சாயா க்ரஹம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து தேவர்களுக்குப் படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தார். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையைச் சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தார் பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் புரிந்து க்ரஹ நிலையை அடைந்தார்.

ராகுவுக்குச் சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக எடுத்துக்கொள்வார். சேரும் க்ரஹத்திற்கு தக்கவாறும் செயல்படுவார். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூதாட்டம் இவற்றிற்கெல்லாம் ராகுவே அதிபதி.

விஷம், மரணம், பித்தம், பேய் பிசாசு, மது குடித்தல், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, சிறைப்படல், மாந்திரீகம், பிறரைக் கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷப் பூச்சிகள் போன்றவற்றுக்குக் காரகம் வகிக்கிறார்.

9.கேது :-

ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது. மோட்ச காரகனும் இவரே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றார்.

கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவற்றிற்குக் காரகமாகக் கேது பகவான் இருக்கிறார்.

இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயல்படுவார்.