சென்னை:

ந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்று, மகாராஷ்டிரா அரசியல் குறித்து திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்து உள்ளார்.

288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்,  காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. அங்கு ஆட்சி அமைப்பதில் பா.ஜ-சிவசேனா கூட்டணி இடையே கருத்து வேறுபோடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாஜகவுடனான உறவை சிவசேனா முறித்துக்கொண்ட நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.

இதில் ஓரளவும் வெற்றியும் பெற்ற சிவசேனா கட்சி, விரைவில் ஆட்சி அமைப்போம் என்று கூறி வந்தது. இதற்கு சரத்பவாரும் ஓகே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திடீர் திருப்பமாக சரத்பவாரின் கட்சி ஆதரவுடன் பாஜக இன்று காலை அவசரம் அவசரமாக பதவி ஏற்றது. சரத்பவார் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த பதவி ஏற்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி வருகிறது. ஆட்சி அமைத்தது.  நாடு முழுவதும் உள்ள  அரசியல் கட்சிகள்  கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது? ‘ஜனநாயகப் படுகொலை’ என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ – நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

சட்டக் கொள்கைகளும் அரசியல் ஒழுக்கமும் இன்று சந்தர்ப்பவாத அரசியலின் கைகளில் தோற்கடிக்கப்பட்டு உள்ளன. அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பது,  ஜனநாயகத்திற்கான மரண தண்டனையை திறம்பட வெளிப்படுத்தியுள்ளதை காட்டுகிறது. இது என்ன பாணி அரசியல் என்பது?  பாஜக சித்து விளையாட்டு என்பதா?

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு என்று காட்டமாக விமர்சித்து உள்ளார்.