புலந்த்ஷகர், உத்திரப்பிரதேசம்

த்திரப் பிரதேச மாவட்டத்தில் பசு பாதுகாவலர்களால் நடந்த கலவரத்தில் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் மாவட்டத்தில் ஒரு பசு கொல்லப்பட்டு கிடந்ததால் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பசு பாதுகாவலர்களால் நடத்தப்பட்ட இந்த சாலைமறியல் கலவரமாக மாறி வன்முறை வெடித்தது.  கலவரம் நடத்தியவர்கள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் என்பவர் கொல்லப்பட்டார்.

கலகக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்ததில் இளைஞர் ஒருவர் பலி ஆனார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு காவல்பிரிவு அமைக்கப்பட்டது. அந்த விசாரணையின் போது கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 27 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தற்போது இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  ஒரு குற்றப்பத்திரிகை கலவரம் மற்றும் கொலை நடத்தியதாக 38 பேர் மீது பதியப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. மற்றொரு குற்றப்பத்திரிகை பசுவைக் கொன்றவர்கள் மீது பதியப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 38 பேரில் ஐந்து பேர் மீது ஆய்வாளர் சுபோத் குமாரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமார் 3000 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை லக்னோ நகர நீதிமன்றத்தில் சிறப்பு படையினரால் அளிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நாளை முதல் இந்த நீதிமன்றம் ஆய்வு செய்யும் என அறிவித்துள்ளது.