சூரத்: சூரத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் 630 ரூபாய் ரயில் கட்டணத்துக்கு பதிலாக 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் சிக்கி இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு ஷ்ராமிக் ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால் இந்த ரயில்களில் ஏறும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கூடுதல் பணம் டிக்கெட்டுக்காக வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வந்தன. ஆனால் அதை ரயில்வே அமைச்சகம் மறுத்து வந்தது.
இந் நிலையில், சூரத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் அதிக ரயில் டிக்கெட் கட்டணம் வசூலித்ததாக அதில் பயணித்த தொழிலாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
குஜராத்தின் சூரத் நகரில் இருந்து சிறப்பு ஷ்ராமிக் ரயில்களில் ஏராளமானோர் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். அவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள 630 ரூபாய் டிக்கெட் கட்டணத்துக்கு பதிலாக 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த ரயிலில் பயணித்த சோனிகா என்பவர் கூறியதாவது: டிக்கெட்டுக்கு நான் செலுத்திய விலை ரூ .800, பரிமாறப்பட்ட உணவு கூட வெற்று அரிசிதான் என்று கூறினார்.
மற்றொரு பயணியான சுபாஷ் என்பவர் கூறி இருப்பதாவது: நாங்கள் முன்கூட்டியே பணத்தை கொடுத்துவிட்டோம். அதன்படி எங்கள் எண் வந்ததும் நாங்கள் ஒரு பேருந்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பு, எங்களுக்கு பேருந்தில் டிக்கெட் வழங்கப்பட்டது, அவர்கள் இடைத்தரகர்கள், ரயில்வே அதிகாரிகள் அல்ல என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.