சென்னை: குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் வகையில், குற்ற வழக்குகளில் காவல்துறையினர்  விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைஅதிகாரிகளுக்கு  சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

எம்.கே.பி. நகர் சரகத்தில் நடந்த 7 கொலை வழக்குகள் மற்றும் 1 கொலை முயற்சி வழக்கில் விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைதுசெய்து வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், எம்.கே.பி. நகர் காவல் ஆய்வாளர் தியாகராஜன், கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஆப்ரகாம் குரூஸ் துரைராஜ் ஆகியோர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த 17 நாட்களிலிருந்து 50 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். அவர்களை  நேரில் அழைத்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து, அவர் பிறப்பித்துள்ள  உத்தரவில் கொலை, கொலை முயற்சி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்கள் தொடர்பாக குற்றப் பத்திரிகைகளை விரைந்து தயார் செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதன்மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்யமுடியும். குற்றம் நடந்த 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யவில்லை என்றால் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் குற்றவாளிகள், தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே,அனைத்து காவல் உதவிஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களும் இதில் கவனமுடன் செயல்படவேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.