ராய்ப்பூர்

த்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம்  செய்யப்பட்டுள்ளது.  இதில் பலர் பெயர் விடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.    இந்நிலையில் நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமல் செய்யப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது பல மாநிலங்களில் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், “நமக்கு முன் உள்ள பெரிய சவால் மத்திய அரசில் பாஜக உளதாகும்.   அவர்களுடைய கொள்கைகள் மக்களைத் தவறான பாதையில் செலுத்துகின்றன.    இதன் மூலம் பிரித்தாளும் போக்கைக் கையாளுகின்றனர்.

இதனால் நாடு தற்போது தீப்பிடித்து எரிவதைப் போல் உள்ளது.  பல மாநிலங்களில் வன்முறை கொழுந்து விட்டு எரிகிறது.  மாணவர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது.  கொலை, கொள்ளைகள் மூலம் நாடெங்கும் ஒரு அச்சத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.   அவர்கள் ஒரே நோக்கம் பதவியில் இருப்பது மட்டுமே.

முதலில் அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் உங்கள் பணத்தை வங்கிக்குக் கொண்டு சென்றனர்.   அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு விஜய் மல்லையா நாட்டை விட்டே ஓடி விட்டார்.   அதன் பிறகு அவர்கள் ஜிஎஸ்டி அமலாக்கினார்கள். ஒரே வரியாம் ஒரே நாடாம். ஆனால் அதன்பிறகு என்ன ஆயிற்று. பணமதிப்பிழப்பால் மக்கள் இறந்தனர்.   ஜிஎஸ்டியால் தொழில் வர்த்தகம் அனைத்தும் முடங்கியது.

பாஜக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி தீவிரவாதிகளை ஒழித்து விட்டதாகக் கூறி மீண்டும் பதவியைப் பிடித்தது.  அவர்கள் தீவிரவாதிகளை முழுமையாக ஒழித்திருந்தால் புல்வாமா தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது?  அந்த இடத்துக்கு அத்தனை ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டது?

அவர்கள் புதிய குடியுரிமை சட்டத்தை எடுத்து வந்துள்ளனர்.  அசாம் முழுவதும் தீப்பிடித்து எரிகிறது.   இந்த சட்டத்தின் விளைவுகளால் அசாம் மட்டுமின்றி மேற்கு வங்கம் மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களிலும் வன்முறை நிகழ்ந்துள்ளது. தற்போது தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடெங்கும் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்த பதிவேட்டில் இடம் பெற்றால் மட்டுமே உங்களை இந்தியன் என அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.   ஒருவரிடம் நிலம் ஏதும் இல்லை, அல்லது வயதானவர் அல்லது படிக்காதவர் எனில் இந்த பதிவேட்டில் எவ்வாறு இடம் பெற்று தம்மை இந்தியன் என நிரூபிப்பார்?  அப்படி நிரூபிக்காதவர்களை பாஜக ஆட்சியாளர்கள்  எங்கு அனுப்ப உள்ளனர்.

நான் ஒரு போதும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய குடியுரிமைப் பட்டியலை அனுமதிக்க மாட்டேன்.  அது அமலுக்கு வந்தால் அதில் இடம்பெற மறுக்கும் முதல் ஆளாக நான்  இருப்பேன்.  நான் எதற்காக இந்தியன் என்பதை உங்களிடம் நிரூபிக்க வேண்டும்.  நான் இதில் இடம் பெறாமல் காந்திய வழியில் போராட்டம் நடத்துவேன்.  இந்த விவகாரத்தில் அனைத்து மக்களும் காங்கிரஸுடன் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.