ராய்ப்பூர்

வாட்ஸ்அப் மூலம் இந்தியாவில் வேவு பார்த்தாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய சத்தீஸ்கர் மாநில அரசு  ஒரு குழுவை  அமைத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம்தேதி அன்று வாட்ஸ்அப் இணையம் தனது பயனாளிகளில் பத்திரிகையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் பிகாசஸ் என்னும் வைரசைப் பரப்பி வேவு பார்த்ததாக  சான்பிரான்சிஸ்கோ நகரில் வழக்குப் பதிந்ததாக தகவல்கள் வெளியாகின.   அத்துடன் இந்த அறிக்கையில் இஸ்ரேல் நாட்டைச் செந்த என் எஸ் ஓ ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல் உலகெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இது குறித்து இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.   அத்துடன் இந்தியக் குடிமக்களின் தனித்தன்மையை பாதுகாக்க வாட்ஸ்அப் நிர்வாகம் என்ன செய்ய உள்ளது எனக் கேள்வி எழுப்பியது.    பல அரசியல் தலைவர்களும் இந்த வேவு பார்த்தல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 2 அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பே இஸ்ரேல் நிறுவனமான என் எஸ் ஓ சத்தீஸ்கர் காவல்துறையைக் கண்காணிக்க முயன்றதாகப் புகார்கள் வந்தன.  தற்போது அதே நிறுவனம் வாட்ஸ்அப் மூலம் இந்தியப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை வேவு பார்த்துள்ளது.  இது மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலாகும்.  இந்த புகார்களை விசாரிப்பது அவசியம் ஆகும்.

எனவே சத்தீஸ்கர் மாநில அரசு இதுகுறித்து விசாரணை செய்ய மூவர் கொண்ட ஒரு குழுவை அமைக்க உள்ளது.  அந்தக் குழுவுக்கு உள்துறை செயலர் தலைமை வகிப்பார்.  அவருடன் ராய்ப்புர் காவல்துறை பொது ஆய்வாளர் மற்றும் காவல்துறை டிஜிபி இடம் பெறுவார்கள்.  இது குறித்து விரிவான விசாரணை நடத்த உள்ள இந்தக்குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.