சத்தீஸ்கர் : ராகுல் காந்தி இன்று தொடங்கி வைக்கும் ராஜீவ்காந்தி விவசாயிகள் நலத் திட்டம்

ராய்ப்பூர்

த்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா என்னும்  விவசாயிகள் நலத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்

கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நேரடி வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் ஏழைகள் குறைந்த பட்ச வருமானம் பெறுவதை உறுதி செய்யும் நியாய் என்னும் திட்டத்தை அறிவித்தார்.  அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாததால் திட்டம் இயற்றப்படவில்லை.   மத்தியில் ஆட்சியில் இல்லாத போதும் காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் சுமார் 18 லட்சம் விவசாயிகளில் ரூ.8800 கோடி கடனிதள்ளுப்டி செய்தது.  அதன் பிறகும் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மாநில அரசு நடத்தி வருகிறது.  இம்மாநிலத்தில் 50 அங்குலம் மழை பெய்த போதும் 20% விளை நிலங்களில் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது.   மொத்த விளை நிலங்களில் 43% வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால் இந்த பகுதியில் 5% கூட பயிர் செய்ய முடியாத நிலை உள்ளது.

இதையொட்டி விவசாயிகள் குறைந்த பட்ச வருமானம் ஈட்டுவதை உறுதிப்படுத்தும் ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா எனப்படும் விவசாயிகள் நலத் திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்தார்.  இந்த திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.   இந்த திட்டம் முதல் முதலாக சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார்.   இன்று ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் கீழ் சுமார் 19 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் உதவித் தொகை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.   இந்த விவரங்களை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.

இதன்படி மாநிலத்தின் முக்கிய பயிரான நெல்லை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 10000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது.  அத்துடன் கரும்புக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.93 என நிர்ணயிக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.13000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது.  இதன் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மாநிலத்தில் 40% மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாலும், 41.7% பெண்களும் 37.5% குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாலும் இந்த நிதி அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இந்த நிதியின் மூலம் ரூ.5700 கோடி தொகை 19 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.