காதர்டோலி, சத்தீஸ்கர்

த்தீஸ்கர் மாநில கிராமப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியருக்கு வாரத்தின் நாட்கள் 7 என்பது கூட தெரியாமல் உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல கிராமப்புற பள்ளிகள் அதிகாரிகளின் கவனிப்பின்றி உள்ளது.    இந்தப் பள்ளிகளுக்கு வருடாந்திர ஆய்வுகள் நடைபெறுவதில்லை.    மேலும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒழுங்கீனத்துடன் நடந்துக் கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.    ஆசிரியர்கள் ஆண்டவனுக்கு சமம் என்பது போய் இங்கு நிறைய இடங்களில்  ஆசிரியர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என ஆகி விட்டது.

ராய்ப்பூர் அருகில் உள்ளது காதர்டோலி என்னும் கிராமம்.   இங்குள்ள ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 வகுப்புக்கள் நடைபெறுகின்றன.   இங்கு தலைமை ஆசிரியராக பணி புரிபவர் ராஜேஷ் குமார் சூரியவன்ஷி.     மற்றொரு ஆசிரியர் சந்தீப் கெஸ்.   இருவரும் பள்ளியை தங்கள் தங்குமிடமாக்கிக் கொண்டுள்ளனர்.    இதனால் பள்ளிகளின் வகுப்புக்கள் வெட்ட வெளியில் நடைபெறுகின்றன.

ஆசிரியர்கள் வகுப்புக்களை எப்போதாவது தான் நடத்துவதால் நாள் முழுவதும் மாணவர்கள் விளையாடியபடி உள்ளனர்.  இது குறித்து மாணவர்கள், “குருஜி (ஆசிரியரை அப்படி அழைக்கிறார்கள்) மது அருந்த போயிருக்கிறார்.    விரைவில் வந்து விடுவார்.  வந்ததும் சுய நினைவில் இல்லை என்றால் எங்களுக்கு விடுமுறை அளித்து விடுவார்.” எனக் கூறி உள்ளனர்.   ஆசிரியர்கள் குறித்து பெற்றோர்கள் அளித்த எந்த ஒரு புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

பள்ளியின் கரும்பலகையில் தலைமை ஆசிரியர் வாரத்தின் நாட்களாக ஆறு நாட்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.   நடுவில் வியாழக்கிழமையை அவர் எழுதவில்லை.   அதை சுட்டிக் காட்டியும் அவர் திருத்திக் கொள்ளவில்லை.    அத்துடன் ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளும் ஏராளமாக உள்ளன.

இந்த செய்தியை வெளிக்கொணர்ந்த ஊடகங்களை சேர்ந்தவர்கள் தலைமை ஆசிரியரிடம் சில கேள்விகள் கேட்டுள்ளனர்.

அதற்கு சூரியவன்ஷியால் பதில் அளிக்க தெரியவில்லை.   மாநில கல்வி அமைச்சரின் பெயர் கூ ட அவருக்கு தெரியவில்லை.   உள்துறை அமைச்சர் மாநிலத்தில் வீடுகள் கட்டிக் கொடுப்பவர் என பதில் அளித்துள்ளார்.

இந்த செய்தி வட இந்திய ஊடகங்களில் வெளியானதும் தற்போது சத்தீஸ்கர் கல்வித்துறை தலைமையாசிரியர் சூரியவன்ஷி,  மற்றொரு ஆசிரியர் சந்தீப் கெஸ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது.