சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு வாஜ்பாய் பெயர்….‘அடல் நகர்’ என மாற்ற முடிவு

ராய்ப்பூர்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். டில்லியில் தகனம் செய்யப்பட்ட அவரது உடலின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் வாஜ்பாயை பல வகைகளில் கவுரவித்து வருகின்றன. சட்டீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை ‘அடல் நகர்’ என்று வாஜ்பாய் பெயரில் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபாலில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அவரது வாழ்க்கை வரலாறை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் மத்தியப்பிரதேச கல்வித் துறை முடிவு செய்துள்ளது.